×

காலி மனையில் குப்பை குவியலால் கொசு உற்பத்தி அபராதம் மட்டும் வசூலித்துவிட்டு குப்பையை அகற்றாத அதிகாரிகள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

பெரம்பூர்:  சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, பருவ மழையின்போது, டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகமாக காணப்பட்டது. எனவே, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். அதில் ஒன்று, காலி இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பது, வீடுகள் அதிகம்  உள்ள பகுதிகளுக்கு நடுவே காலியிடங்கள் இருப்பின் அதில் குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கினால் அபராதம் விதிக்கப்பட்டது.  பின்னர், காலி மனைகளில் தேங்கிய குப்பை குவியலை மாநகராட்சி ஊழியர்களே அகற்றிவிட்டு, அதற்கு கட்டணமாக இருமடங்கு அபராதம் விதித்தனர். இடங்களுக்கு ஏற்றவாறு அபராத தொகையும் மாறுபட்டது. நாளடைவில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் குறைய ஆரம்பித்ததால் மாநகராட்சி அதிகாரிகள் காலி இடங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க மறந்துவிட்டனர்.

இதனால், தற்போது பல இடங்களில் காலி இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   இந்நிலையில், பெரம்பூரில் உள்ள ஒரு பகுதியில் குப்பை குவியலாக இருந்த இடத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த இடத்தை சுத்தம் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 44வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூர் சுப்பிரமணிய மெயின் ரோடு மற்றும் காந்தி தெரு சந்திப்பில் காலிமனை ஒன்று உள்ளது. இங்கு அதிகமான குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மர்ம காய்ச்சலால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுபற்றி அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளருக்கு கடந்த நவம்பர் மாதம் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், அந்த இடத்தை சுத்தம் செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர். ஆனால், அபராத தொகையை செலுத்தியும் இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை சுத்தம் செய்து தரவில்லை.  இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து, காலி மனையில் குவிந்துள்ள குப்பை குவியலை விரைந்து அகற்ற வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : land Officers ,land , Empty land, garbage, mosquito production, civilians
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...